சென்னை: கோவை அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது சார்பதிவாளர் காரில் இருந்த ரூ.2.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல சிவகங்கையில் நடந்த சோதனையில் ரூ.72,730 பறிமுதல் செய்யப்பட்டது. கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சென்றனர். அப்போது சார்பதிவாளர் அருணா வாடகை காரில் ஏறி புறப்பட்டுள்ளார்.
அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் காரில் சோதனை செய்தனர். அதில், கணக்கில் வராத ரூ.2.80 லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பணியாளர்களையும் வெளியே அனுப்பாமல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று காலை 7 மணி வரை நடைபெற்றது. சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சிவகங்கை அருகே மதகுபட்டியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் ஏராளமான முறைகேடுகள், கூடுதல் பண வசூல் குறித்து புகாரையடுத்து நேற்று மாலை சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் தொடர்ந்த சோதனையில் அலுவலர் ஒருவரிடம் ரூ.1,500ம், ஒரு அறையில் ரூ.71,230 கைப்பற்றப்பட்டது. சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். இந்த சோதனை இரவு வரை தொடர்ந்தது. ரூ.1.2 லட்சம் பறிமுதல்: திருப்பூரில் ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நடத்திய சோதனையில் உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கம் (42) என்பவரிடமிருந்து ரூ.86 ஆயிரம், உதவி பொறியாளர் சிவராஜ் (58) என்பவரிடமிருந்து ரூ.16,300 என ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.