கோவை: கோவை மாநகராட்சி 7வது மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வாகி நேற்று பதவி ஏற்றார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார், கடந்த ஜூலை 3ம் தேதி மருத்துவ காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து 29வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி புதிய மேயர் வேட்பாளராக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். அவர் நேற்று, தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, காலை 11.02 மணிக்கு, ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான சிவகுரு பிரபாகரன் அறிவித்து, மேயராக தேர்வு பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதைத்தொடர்ந்து, ரங்கநாயகி, மேயர் அறைக்கு சென்று, மேயருக்கான சிவப்பு நிற பிரத்யேக அங்கி அணிந்து மீண்டும், மன்றத்துக்கு வந்தார்.
அவருக்கு, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயருக்கு வெள்ளி செங்கோல் வழங்கினார். இதன்பின்னர், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, துணை மேயர் வெற்றிசெல்வன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேயர் ரங்கநாயகி கூறுகையில், ‘‘கோவை மக்களின் தேவை அறிந்து செயல்படுவேன்.
எல்லா வார்டுகளுக்கும் சென்று அங்குள்ள பிரச்னைகளை ஆய்வு செய்வேன். அவசர, அவசிய தேவைளுக்கு உடனடி தீர்வு காண்பேன். அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளை அ ரவணைத்து செல்வேன்’’ என்றார். புதிய மேயர் தேர்தலுக்கு, முன்னாள் மேயரும், 19வது வார்டு கவுன்சிலருமான கல்பனா ஆனந்தகுமார், நேற்று முதல் ஆளாக வந்து பங்கேற்றார். புதிய மேயருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.