கோவை: கோவை மாவட்டம் செங்கத்துறை கிராமத்தில் வீடு மற்றும் கோயிலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி, 5 கிலோ வெள்ளி கிரீடம் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் ஆகியவை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் செங்கத்துறை மைதானத்தில் மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று பூஜைகள் முடித்துவிட்டு வழக்கம்போல் பூசாரி கோயிலை பூட்டி சென்றுள்ளார். கோயிலின் அருகே சுப்பாத்தாள் என்பவரின் வீடும் அமைந்துள்ளது. அந்த பெண் தனது மகன் வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சென்றுள்ளார்.
சுப்பாத்தாள் வீட்டில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் காலையில் வீட்டில் வந்து பார்க்கும்பொழுது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துள்ளது. இதனை கண்ட பணியாளர்கள் மகன் வீட்டிற்கு சென்றிருந்த பெண்ணிடம் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுப்பாத்தாள் வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டறிந்தனர்.
பின்னர் பெண்ணின் வீட்டின் அருகில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது கோயிலின் பூட்டும் உடைக்கப்பட்டு அம்மனின் தங்க தாலி, 5 கிலோ வெள்ளி கிரீடம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மர்ம நபர்கள் கோயிலில் நுழைந்து கொள்ளையடித்து சென்றது பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஆய்வு செய்தனர். கோயில் மற்றும் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.