கோவை: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய கடந்த 2 நாட்களாக சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது. சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி ஓட்டுச்சாவடியில் வைத்திருந்த பட்டியலில், வரிசை எண் 532 என குறிப்பிடப்பட்டு 60 வயதான நபர் ஒருவரின் பெயர், முகவரி இந்தியில் இருந்தது.
இந்த பட்டியலை பார்த்தவர்கள் இது தொடர்பாக தேர்தல் பிரிவில் புகார் அளித்தனர். தமிழில் வெளியான பட்டியலில் இந்தியில் திடீரென பெயர், முகவரி அச்சடிக்கப்பட்டது எப்படி? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் 400க்கும் மேற்பட்டவர்களின் பெயர், முகவரி விவரங்கள் அடங்கிய பட்டியல் இந்தியில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.