சென்னை: கோவை மாவட்டத்தில் ரூ.45 கோடியில் தங்க நகை பூங்கா அமைக்க சிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியதுள்ளது. கோவை மாநகரில் 40 ஆயிரம் நகை ப்பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளை நம்பி 1.50 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். அதிலும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விற்பனை பிரிவுகளில் தினமும் 200 கிலோ எடையிலான தங்கம் வர்த்தகம் நடைபெறுகிறது. இங்கு தயாரிக்கப்படும் தங்க நகைகள் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் தங்க நகை தொழில் வளர்ச்சிக்காக தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நகை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு குறிச்சி தொழிற்பேட்டையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல் பிற மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்க நகை வர்த்தகம் தொடர்பான பணிகளுக்கு கோவை வந்து செல்கின்றனர். இவ்வாறு வருவோருக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பிடம் என அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம் குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.45 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சுமார் 2.46 ஏக்கரில் 8.5 லட்சம் சதுரடியில் இந்த தங்க நகை பூங்கா அமைய உள்ளது. 3டி பிரிண்டிங், லேசர் கட்டிங், ஒரு ஹால்மார்க் சோதனை அறை, பெட்டகம், கண்காட்சி மற்றும் மாநாட்டு அரங்குகள், ஒரு பயிற்சி மையம் மற்றும் ஒரு உணவு அரங்கம் போன்ற மேம்பட்ட வசதிகளை உள்ளடக்கும். மேலும் தரைத்தளத்துடன் 5 தளங்களை கொண்ட கட்டிடம் கட்டுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக சிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. கட்டுமான பணிகள் தொடங்கி 18 மாதங்களில் முழுமையாக முடிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* தினசரி வர்த்தகம் 250 கிலோவாக உயரும்.
* வேலைவாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும்.
* முதல் கட்டத்தில் 28 பெரிய அலகுகள் (500 சதுர அடி), 72 நடுத்தர அலகுகள் (200 சதுர அடி), மற்றும் 316 சிறிய அலகுகள் (100 சதுர அடி) ஆகியவை இடம்பெறுகிறது
* 12 லாரிகள், 21 கார்கள் மற்றும் 1,200 இருசக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதிகள்
* இரண்டாம் கட்டத்தில் 315 நடுத்தர மற்றும் 2,500 சிறிய அலகுகள் அமைக்கப்படுகிறது.
* பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மிகக் கடுமையானவையாக பயோமெட்ரிக், சிசிடிவி, ஈரடுக்கு வால்ட் செக் போன்றவை அமைகிறது.