சென்னை: கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக்டோபர் 23ம் தேதி கார் வெடித்து சிதறியது. இதில் உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷாமுபின் (27) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு,என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. அதன்பின், இந்த வழக்கில் உமர்பரூக், பெரோஸ்கான், முகமது தவ்பிக் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவை கார் வெடிப்பு வழக்கில் கோவை தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஈசாக் என்பவரது மகன் முகமது இத்ரிஸ் (25) என்பவரை நேற்று முன்தினம் என்ஐஏ இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர். பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட முகமது இர்தியாஸ் பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர்படுத்தினர்.