பூந்தமல்லி: கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் சிறையில் உள்ள இருவரை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் இதுவரை இந்த வழக்கில் 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் பலரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த சில மாதங்களாக காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது அசாருதீன் (எ) அசார், தாஹா நசீர் ஆகிய இருவரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நீதிபதி இளவழகன் முன்பு நேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகிறது.