கோவை: கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 2 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். கோவை கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமது இத்ரிஸ் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் 8 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று இருவரையும் அதிகாரிகள் உக்கடம் ஜிஎம் நகரில் உள்ள அவர்களது வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களிடமும் போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்தனர்.
இதேபோல் குனியமுத்தூரில் உள்ள அரபி பாடசாலைக்கு இருவரையும் அழைத்து சென்று விசாரித்தனர். இந்த பாடசாலையில் கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் படித்ததாக தெரிகிறது. கோவையில் பல்வேறு அசம்பாவித சம்பவங்களுக்கு சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் இடங்களுக்கும் அழைத்து சென்றனர். ஜமேஷா முபினுக்கு பக்க பலமாக செயல் திட்டங்களை உருவாக்கி தந்தது முகமது அசாருதீன், முகமது இத்ரிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் என என்ஐஏ அதிகாரிகள் கருதுகின்றனர்.
இதற்கான ஆதாரங்களை பெறும் வகையில் நேற்று இந்த விசாரணை நடந்தது. கோவையில் சுமார் 4 மணி நேரம் என்ஐஏ அதிகாரிகள் 2 பேரையும் அழைத்து சென்று விசாரித்து பின்னர் சென்னைக்கு அழைத்து சென்றனர். முன்னதாக கோவையில் 3 நாட்கள் வரை ரகசிய இடத்தில் தங்க வைத்து 2 பேரிடமும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் மாநகராட்சி கவுன்சிலர் வீடு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.