சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, சென்னை தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன் கடந்த ஆண்டு அக்டோபரில் கார் குண்டு வெடித்தது. காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் (28) என்பவர் பலியானார். போலீசாரின் விசாரணையில், இவர் கோவையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க சதி திட்டம் நடந்த விவரம் தெரியவந்தது. இதுதொடர்பான வழக்கில் போலீசார் ஜமேஷா முபினின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது தவ்பிக், பெரோஸ்கான், உமர் பாரூக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி என மேலும் 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கைதானவர்கள் கொடுக்கும் தகவல் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் குனியமுத்தூர் அரபு கல்லூரியில் படித்துள்ளார். இவருக்கு கேரள மாநிலத்தை சேர்ந்த சிலருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, சந்தேக நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்தனர். காலை 5.30 மணி முதல் 25 பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் 5 பிரிவாக சென்று சோதனையிட்டனர். கோவை உக்கடம் ஜிஎம் நகரில் உள்ள அபுதாஹீர், குனியமுத்தூர் செம்மொழி நகரை சேர்ந்த சோகைல், கரும்புக்கடையை சேர்ந்த மன்சூர், பெண் கவுன்சிலரான முபசீராவின் கோட்டை மேடு ராமசாமி தெருவில் உள்ள வீட்டிலும் சோதனை நடந்தது. கிணத்துக்கடவு, ஆர்.எஸ்.புரம், கவுண்டம்பாளையம் பகுதிகளில் சிலரது வீடுகளிலும் சோதனை செய்தனர். 22 பேர் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். காலை 5.30 மணிக்கு துவங்கிய விசாரணை, சோதனை காலை 9.30 மணி வரை நடந்தது. ஆவணங்கள், ஆதாரங்களை சேகரித்த அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
சென்னையில் ஈஞ்சம்பாக்கம் பிஸ்மில்லா தெருவில் சென்னை துறைமுக அதிகாரி புகாரி என்பவர் வீட்டிலும், அயனாவரம் மயிலப்பன் தெருவில் முகமது ஜக்கிரியா என்பவர் வீட்டிலும், திருவிக நகர் காமராஜர் தெருவில் முஜிபுர் ரகுமான் என்பவர் வீடு என மூவர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இவர்கள் கோவை அரபிக் கல்லூரியில் படித்தவர்கள். மேலும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர், ரசாலியாபுரம் தெருவில் உள்ள முகம்மது இத்ரிஸ் (32) என்பவரின் வீட்டில் சோதனை நடந்தது. சென்னையில் தனியார் ஐடி கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றுகிறார்.
இவர்களது வீட்டில் இருந்து செல்போன், சிம் கார்டுகள், ஆவணங்கள், லேப்-டாப், பென்டிரைவ், சிடி, துண்டு பிரசுரங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். கொச்சின் மற்றும் கோவையில் செயல்பட்டு வரும் என்ஐஏ அலுவலக அதிகாரிகள் சோதனை நடத்தினர். 22 பேரிடம் முதல்கட்ட விசாரணை நடந்துள்ளது. இவர்களில் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, தெலங்கானா மாநிலங்களில் 31 இடங்களில் சோதனை நடந்தது. இதில் 60 லட்சம் ரூபாய், 18,200 அமெரிக்க டாலர், அரபு மொழியில் இருந்த சில ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், ஆதாரங்கள் கைப்பற்றியிருப்பதாக என்ஐஏ தலைமை அலுவலகத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.