கோவை: கோவை விமான நிலைய விரிவாக்க பணிக்காக எவ்வித நிபந்தனையுமின்றி 451 நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 662 ஏக்கர் தேவை. இதில், 468.83 ஏக்கர் பட்டா இடம். நிலம் கையப்படுத்தும் பணி 97 சதவீதம் நிறைவடைந்தது. மீதி 3 சதவீதம் பணி உள்ளது. தற்போது பட்டா நிலம் 451 ஏக்கர் எந்தவித நிபந்தனைகளுமின்றி விமான நிலைய விரிவாக்க பணிக்காக கோவை விமான நிலைய இயக்குநருக்கு கொடுக்கிறோம்.
மீதமுள்ள 16 ஏக்கர் நிலம் நீதிமன்ற வழக்கு உள்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.இதில், பெரும்பாலான பணிகளை இந்த மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க இலக்கு வைத்து உள்ளோம். ராணுவத்துக்கு சொந்தமான 134.32 ஏக்கர் நிலம் உள்ளது. விரிவாக்க பணியை தொடங்க இந்திய ராணுவம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட ஒப்பந்தம் இந்திய ராணுவத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே நடக்கும். அதன்பிறகு அந்த இடத்தில் விரிவாக்க பணிகள் தொடங்கும். புறம்போக்கு நிலம் 29.58 ஏக்கர் உள்ளது.
அதில், 20.58 ஏக்கர் நிலத்தை தற்போது ஒப்படைக்கிறோம். பிரச்னைக்குரிய இடமாக உள்ள 9 ஏக்கர் நிலம் தமிழக அரசிடம் இருந்து இறுதி அரசாணை வந்த பிறகு ஒப்படைப்போம். ரூ.1,848 கோடி வரை இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து நில உரிமையாளர்களுக்கும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. 16 ஏக்கர் நிலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். திருச்சி சாலையில் இருந்தும், அவினாசி சாலையிலிருந்தும், ஒரு சாலை விமான நிலையத்திற்கும் வர வேண்டி உள்ளது. அதற்கான நிலங்களை கையகப்படுத்த விமான நிலைய இயக்குநர் கடிதம் அனுப்பி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
* மீண்டும் திமுக ஆட்சியில் கிடைத்தது
கோவை எம்பி கணபதி ராஜ்குமார் கூறுகையில்,“கோவை விமான நிலையம் 2010-ல் நில எடுப்பு பற்றி அப்போதைய திமுக அரசு முதன்முதலில் அரசாணை வெளியிட்டது. அதன் பிறகு இத்தனை ஆண்டு காலத்திற்கு பிறகு தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் முடிவு கிடைத்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஒன்றிய அரசு மிக விரைவாக நடவடிக்கை எடுத்து விரிவாக்கம் செய்து பெரிய விமானங்கள் வந்து செல்லும் அளவுக்கு கொண்டுவர வேண்டும். மெட்ரோ ரெயில் பணிகளுக்கான அனைத்து தகவல்களையும் திரட்டி ஒன்றிய அரசிடம் கொடுத்து உள்ளோம். ஆனால், ஒன்றிய அரசு அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. கோவையில் கிரிக்கெட் மைதானம் சம்பந்தமாக டிசைன் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது’’ என்றார்.