அண்ணாநகர்: சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகள், சமீப காலமாக திடீரென பொதுமக்களை முட்டி, தூக்கி வீசும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் குப்பையில் வீசப்படும் காய்கறிகளை சாப்பிட சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிகின்றன. எனவே, இந்த மாடுகளை பிடிக்க வேண்டும், என வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்கெட் வளாகத்தில் நேற்று சுற்றித்திரிந்த 62 மாடுகளை அங்காடி நிர்வாகம் சார்பில் பிடித்தனர். பின்னர், அந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.31,000 ஆயிரம் அபராதம் விதித்தனர்.