சென்னை: குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோவையில் விதி மீறி குவாரி நடத்தியதற்காக குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரருக்கு குவாரி நடத்த எந்த உரிமமும் இல்லை என்றும், எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகை குவாரி உரிமையாளரிடம் வசூலிக்கப்படும் என்று என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பரத சக்கரவர்த்தி, குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து, ரத்தத்தை குடிக்கின்றனர். சூழல் பாதுகாப்பு சட்டமே நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காக்கத்தான். குவாரி மூடல் என அதிகாரிகள் அறிக்கை தந்துவிட்டு மறுபுறம் குவாரி செயல்பட அனுமதித்துள்ளனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய சம்பந்தப்பட்ட துறை ஆணையரின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. சட்டப்படி ஒட்டுமொத்த அபார தொகையையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும். இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் எடுத்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு பற்றி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க நடவடிக்கை வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.