*உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுக்கரை : கோவையில் பந்தயம் மற்றும் பயணத்தில் ஓடும் திறன் குறைந்த 10க்கும் மேற்பட்ட குதிரைகளை அதன் உரிமையாளர்கள் கைவிட்டுள்ளனர்.
அவைகள் குடிநீர், உணவுக்காக தெருத்தெருவாக சுற்றி வருவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.அந்த குதிரைகள் மதுக்கரை, குவாரி ஆபீஸ், மதுக்கரை மார்க்கெட், குரும்பபாளையம் பிள்ளையார்புரம், ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வந்தது.
தற்போது அவைகள், ஈச்சனாரி, சிட்கோ உள்ளிட்ட பகுதிகளிலும் வலம்வர துவங்கியுள்ளது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த, கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், குதிரைகள் சுற்றி திரிந்து, குறுக்கும் நெடுங்குமாக ஓடுவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே குதிரைகள் சுற்றி திரிவதை, அதிகாரிகள் கட்டுபடுதுவதோடு, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.