சென்னை: கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதியின் இரண்டாவது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். 1287 சதுர கிமீ பரப்பளவுள்ள கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதிக்கான முதல் முழுமைத் திட்டத்துக்கு கடந்த 1994 அக்டோபர் 12ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர், இரண்டாவது முழுமைத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி அரசின் அனுமதி வழங்கப்பட்டது. அது இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் பெறப்பட்டன.
தற்போது, மாநகராட்சி, நான்கு நகராட்சிகள் (மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலூர் மற்றும் காரமடை), 21 நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் 66 வருவாய் கிராமங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய 1531.57 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட, கோயம்புத்தூர் உள்ளூர் திட்டப் பகுதிக்கு முதன்முறையாக புவியியல் தகவல் அமைப்பு அடிப்படையிலான கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு, முழுமையான நகரப் போக்குவரத்து திட்டம் மற்றும் 2041-க்குள் 33 சதவிகித பசுமை பரப்பளவை அடைவது போன்ற அரசின் முக்கிய கொள்கைகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் இரண்டாவது முழுமைத் திட்டம் – 2041, மண்டல இணைப்புகளை மேம்படுத்தல், சமூக மற்றும் பொருளாதார உத்திகள் வலுப்படுத்தல், உட்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் மேம்படுத்தல், வீட்டு வசதிகளுக்கான தேவையை பூர்த்தி செய்தல், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த மற்றும் பங்கேற்பு அடிப்படையிலான திட்டமிடல் முறையின் மூலம், பல துறைகளின் திட்டங்களை செயல்முறைப்படுத்த தெளிவான காலக்கெடு மற்றும் திட்ட செலவு மதிப்பீட்டுடன் பகுதி வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட முக்கியமான அம்சமாகும். இம்முழுமைத்திட்டம், நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய மீள்தன்மை கொண்ட நகரமாக கோயம்புத்தூர் உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.