*4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குளித்து மகிழ்ந்தனர்
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது. சாடிவயல் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோவை குற்றாலம் அருவியில் குளித்து மகிழ, உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கோடை காலம் காரணமாக பள்ளிகள் விடுமுறை மற்றும் வெள்ளியங்கிரி மலையேற வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களில் கடந்த சில நாட்களாக கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், குடும்பத்துடன் ஏராளமானோர் கோவை குற்றாலத்திற்கு வருகை தந்தனர். கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாடிவயல் பகுதியில் உள்ள நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதி சீட்டை பெற்றனர்.
பின்னர், வனத்துறையினர் வாகனம் மூலம் அழைத்து செல்லப்பட்ட சுற்றுலா பயணிகள், அருவியில் மிதமான அளவில் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குளித்து மகிழ்ந்தனர். இதையொட்டி நீர் வீழ்ச்சிக்கு செல்ல கூடுதல் வாகனங்களை இயக்கிய வனத்துறையினர், கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.