கோவை: தேனி மாவட்டம் வருசநாட்டை சேர்ந்தவர் காட்டு ராஜா (எ) ராஜா (31). இவர், திருப்பூரில் நடைபெற்ற கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை அவருக்கு சிறையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், நேற்று சரவணம்பட்டியை சேர்ந்த விசாரணை கைதி ராஜ்குமார் (56) என்பவர் சிறையில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரூரை சேர்ந்த சிவா (எ) தாத்தா சிவா சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மத்திய சிறையில் கடந்த 2 நாட்களில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.