சூலூர்: கோவை சூலூர், நீலாம்பூரில் கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின்படி 300க்கும் மேற்பட்ட வீடுகளில் நேற்று காலை 5 மணி முதல் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
நீலாம்பூர் பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்த ஒரு கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர். அங்கு நடத்திய சோதனையில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அங்கிருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அவர்கள், கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தோடு தங்கி இருந்ததும் தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சூலூர் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து 1 கிலோ 250 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில், தாக்குதல் நடத்துவதற்கான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். சோதனையில் உரிமம் இல்லாத 42 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் 36 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இவர்களில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக 6 பேரை கைது செய்தனர். இவர்களில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் எனவும், 3 பேர் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை குற்றவாளிகள் எனவும் கூறப்படுகிறது. கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
சேலம்: சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், தர்மபுரி மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம், தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு லாரியை மடக்கி சோதனையிட்டனர். அந்த லாரியில் வெல்டிங் வைக்க பயன்படுத்தப்படும் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அடியில் அட்டை பார்சல்களில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
லாரி டிரைவரான ஆந்திரா மாநிலம் அனக்காபள்ளி பகுதியை சேர்ந்த சேசுகும்மாலா (34) என்பவரை கைது செய்தனர். லாரிக்குள் இருந்து ₹27 லட்சம் மதிப்புள்ள 270 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கஞ்சாவை கடத்திச் சென்று, பிறகு கடல் வழியே இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக நாகையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே ரோலுகுண்டா வட்டிப்பா பகுதியை சேர்ந்த அப்பலாநர்சா (62), பார்வதி (66), சேலம் மாவட்டம் கருமந்துறை மலை கிராமத்தை சேர்ந்த சடையன் (52) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.