கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி பெண் டாக்டருக்கு வாலிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் அளித்த நிலையில், பயிற்சி மருத்துவர்கள் பாதுகாப்பு கேட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் அருகே டாக்டர்கள் வாகனம் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு, பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அவர், உணவு சாப்பிடுவதற்காக நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வாகனத்தை எடுக்க சென்றார்.
அந்த பகுதியில் மின்விளக்கு சரிவர வேலை செய்யாமல் இருட்டாக இருந்ததாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி மருத்துவமனை வளாகத்தில் இருந்த வாலிபர் ஒருவர் பயிற்சி டாக்டருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் அந்த நபரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பினார். அந்த வாலிபரை பிடிக்க பாதுகாவலர்கள் முயன்றபோது முடியவில்லை. பின்னர், நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்த வாலிபர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவரை அடையாளம் கண்ட பிற டாக்டர்கள் அந்த நபரை பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மயான்கலார் (23) என்பது தெரியவந்தது. இந்நிலையில், பெண் டாக்டருக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தை கண்டித்தும், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் கோவை அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் முன்பு பயிற்சி டாக்டர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டீன் நிர்மலா பேச்சுவார்த்தை நடத்தி, ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற சம்பவம் நடக்காமல் டாக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்’ என்று உறுதியளித்தார். இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
மகளுக்கு பாலியல் தொல்லை சென்னை சிஆர்பிஎப் வீரர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ஆலஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கின்சிலின் பிரபு (40). சென்னை ஆவடியில் சிஆர்பிஎப் படை வீரராக உள்ளார். அவரது 10 வயது மகள், வீட்டின் அருகே உள்ள ஒரு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி சிறுமி தாயுடன் படுத்து இருந்த போது, தந்தை கின்சிலின்பிரபு தனது உடலில் ஆங்காங்கே தொட்டு பாலியல் ரீதியதாக தொந்தரவு செய்து வருவதாக தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், இது தொடர்பாக மேலும் மகளிடம் கேட்டார்.
அப்போது கின்சிலின் பிரபு தனது மகள் 3ம் வகுப்பு படிக்கும் போதே பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், இதனை உனது அம்மாவிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருப்பதும் ெதரியவந்தது. இது குறித்து கின்சிலின்பிரபுவின் மனைவி குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்தநிலையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த கின்சிலின் பிரபுவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது ெசய்தனர்.