சூலூர்: நள்ளிரவில் காரை வழிமறித்து போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிவிட்டு அவரது மனைவியிடம் 5 பவுன் நகையைபறித்து சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூரை சேர்ந்தவர் பார்த்திபன்(45). இவர் கோவை மாநகர கியூ பிராஞ்ச் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேவதி(32). தனியார் பள்ளி ஆசிரியை. இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஏட்டு பார்த்திபன், மனைவி ரேவதியுடன் கோவை எல்என்டி பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு காரில் இரவு 12.30 மணி அளவில் மாற்றுப்பாதையில் வெங்கிட்டாபுரம் மாநாட்டு திடல் பொட்டல் காடு வழியாக திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பொட்டல் காட்டில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத 3 பேர் கும்பல் திடீரென அரிவாளுடன், காரை வழிமறித்து நிறுத்தினர். உடனே அக்கும்பல் பார்த்திபனை கீழே இழுத்து போட்டு அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது மனைவி ரேவதி அக்கும்பலிடமிருந்து அரிவாளை பறித்து கணவரை மீட்டார். பின்னர் அக்கும்பல் ரேவதியின் தாலி செயின், மோதிரங்கள் உள்பட 5 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது. தகவலின்படி போலீசார் வந்து பார்த்திபனை சூலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிந்து, 4 தனிப்படைகள் அமைத்து கும்பலை தேடி வருகின்றனர்.