சென்னை: கோவை திமுக நிர்வாகி ராஜேந்திரனுக்கு எதிராக அவதூறாக பேசுவதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 ஜனவரி 11ம் தேதி பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில், ரயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை பேசியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கக் கோரி கோவை திமுக நிர்வாகி ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிரந்தர தடை விதிக்கக் வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரயிலில் நடந்த சம்பவம் குறித்து இரு நாளிதழ்களில் வெளியான செய்தி தவறானது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நாளிதழ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்மனுதாரர் வேலுமணி மீது மட்டும் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, மான நஷ்டஈடு கோர மனுதாரருக்கு உரிமையில்லை. எதிர்மனுதாரர் வேலுமணி கூட்டத்தில் பேசியதை மனுதாரர் ராஜேந்திரன் நேரில் கேட்கவில்லை. இந்த தகவலை தன்னிடம் தெரிவித்த நண்பர்கள், உறவினர்களை சாட்சியாக விசாரிக்கவில்லை என்பதால் அவர் நிவாரணம் கோர முடியாது.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டத்தில் பேசியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது. பொள்ளாச்சி அல்லது கோவை நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடர முடியும்.
அதேசமயம், இந்த சம்பவம் குறித்து மட்டும் எதிர்காலத்தில் பேசக்கூடாது என்று வேலுமணிக்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. மனுதாரரின் மற்ற நடவடிக்கைகள், விவகாரங்கள் குறித்து பேச எதிர்மனுதாரருக்கு உரிமை உள்ளது. நிரந்தர தடை தவிர, மான நஷ்டஈடு உள்ளிட்ட கோரிக்கைகள் தள்ளுபடி செய்யப்படிகிறது என்று உத்தரவிட்டார்.