கோவை: கோவையில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்த எவ்வித முன்அனுமதியும் இன்றி பொதுஇடத்தில் கூட்டம் கூட்டி பொதுமக்களுக்குப் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையம் அருகே போச்சோ புட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ரயில் பெட்டியில் ஓட்டல் நடக்கிறது. இந்த கடையில் பிரியாணி பெல்லி போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில் 6 பிளேட் பிரியாணி சாப்பிட்டால் 1 லட்ச ரூபாய், 4 பிளேட் சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாய், 3 பிளேட் சாப்பிட்டால் 25 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு பிளேட் பிரியாணி 600 கிராம் எடையில் இருந்தது. அரை மணி நேரத்தில் போட்டியில் அறிவித்த அளவிற்கு பிரியாணி சாப்பிட்டு முடிக்க வேண்டும். அனுமதி இலவசம் என அறிவித்து டோக்கன் தந்து போட்டியில் பங்கேற்க வைத்தனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் குவிந்தனர். நீண்ட வரிசையில் பிரியாணி சாப்பிட காத்திருந்தனர். இதில் ஆட்டிசம் பாதித்த தன் மகனின் மருத்துவ செலவுக்காக கலந்துகொண்ட, கணேசமூர்த்தி என்பவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், போட்டி நடத்திய தனியார் உணவக உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரியாணி போட்டி முன் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு அளித்ததாகவும் இரண்டு பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் குவிந்த கட்டுங்கடங்காத கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும், அந்த பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பிரியாணி போட்டி நடத்திய தனியார் உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி சம்பவத்தன்று நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.