பெ.நா.பாளையம் : கோவை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் உட்பட 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், சாமிசெட்டிபாளையம் அருகே உள்ள சின்னக்கண்ணாபுதுரை சேர்ந்தவர் ஆதிகணேஷ். இவரது மனைவி நந்தினி (22). இவர்களுக்கு மோகித் (3) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், கடந்த 14ம் தேதி இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நந்தினி வேலை பார்க்கும் தனியார் பனியன் நிறுவனத்தில் கஸ்தூரிபாளையம் சத்யாநகரைச் சேர்ந்த தேவிகா (42) என்பவரும் வேலை செய்து வருகிறார்.
தேவிகாவின் உறவினரான கவுண்டம்பாளையம், மாந்தோப்பு பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்-அனிதா (40) தம்பதிக்கு நீண்டகாலமாக குழந்தை இல்லை. நந்தினியின் குடும்ப சூழ்நிலையை அறிந்த தேவிகா தனது உறவினராக மகேஸ்வரன்-அனிதா தம்பதிக்கு நந்தினியின் பெண் குழந்தையை வாங்கி கொடுக்க முடிவு செய்தார். இதற்காக நந்தினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கு நந்தினி சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து ரூ.1 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு பிறந்து 14 நாட்களான பெண் குழந்தையை நந்தினி விற்பனை செய்ததாக தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த சைல்டு ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலின் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் நடந்த சம்பவம் உண்மையென தெரியவந்தது. இதையடுத்து தாய் நந்தினி (22), தேவிகா (42), அனிதா (40) ஆகிய 3 பெண்களையும் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டு ஹெல்ப்லைன் அமைப்பினர் ஒப்படைத்தனர். 3 பெண்களையும் போலீசார் கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.