ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆஷிகா பர்வீன் (22) காபியில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நேற்று நீலகிரி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆஷிகா பர்வீனுக்கும், இம்ரான்கானுக்கும் கடந்த 2021ல் திருமணம் நடந்து, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 23.6.2024 அன்று ஆஷிகா பர்வீனின் தாய் நிலோபர் நிஷாவிற்கு ஆஷிகா பர்வீனின் மாமியாரான யாஸ்மீன் போன் செய்துள்ளார். அப்போது ஆஷிகா பர்வீன் வலிப்பு வந்து கீழே விழுந்ததால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக கூறியுள்ளார். அதன்பேரில் நிலோபர் நிஷா மருத்துவமனைக்கு சென்றபோது ஆஷிகா பர்வீன் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நிலோபர் நிஷா 23.6.2024 அன்று மாலை தனது மகள் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கொடுத்த புகாரின்பேரில் ஊட்டி நகர் மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதியப்பட்டது. கடந்த ஆக.20ல் அறிக்கை பெறப்பட்டது. அதில், ஆஷிகா பர்வீன் சயனைடு விஷத்தால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது சம்மந்தமாக கடந்த 31ம் தேதி ஆஷிகா பர்வீனின் கணவர் இம்ரான்கான், மாமியார் யாஸ்மீன், கணவரின் தம்பி முத்தாகிர், காலிப் ஆகியோரிடம் விசாரணை நடந்தது.
அப்போது யாஸ்மீன் மற்றும் காலிப்பிற்கு இடையே இருந்த கள்ளத்தொடர்பை ஆஷிகா பர்வீன் தெரிந்துகொண்டதாலும், இதை மற்றவர்களிடமும் சொல்லிவிடக்கூடும் என்பதாலும் ஆஷிகா பர்வீனை காபியில் சயனைடு விஷம் கலந்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐபிசி 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டு 4 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் ஆஷிகா பர்வீனின் மதம் குறித்து சிலர் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி வருவதாக தெரியவருகிறது. குடும்ப பிரச்னை காரணமாக நடந்த கொலையால் பதியப்பட்ட வழக்கு. எனவே தவறான செய்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.