சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தென்னை மரங்கள் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலை, கிணத்துக்கடவு, ஆனைமலை, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்கின்றன. கடந்த சில மாதங்களாக, ரூகோஸ், சுருள் வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, கண்ணாடி இறக்கை பூச்சி, சிலந்தி பூச்சி ஆகியவற்றின் தாக்குதலுக்கு தென்னை மரங்கள் உள்ளாகி, கேரள வேர் வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், மஞ்சள் வாடல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு தென்னை மரங்கள் அழிந்து கொண்டு வருகின்றன.
இதுதவிர, வறட்சி காரணமாக அழிந்து வரும் தென்னை மரங்களும் ஏராளம். இந்த நிலை நீடித்தால் தேங்காய் மட்டையில் இருந்து நாரை பிரிக்கும்போது கிடைக்கும் தேங்காய் மஞ்சை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு வந்துவிடும், இதன்மூலம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிக்கப்படும் என்று தென்னை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேளாண் வல்லுநர்கள், தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றினை அமைத்து தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, தென்னை மரங்கள் அழிவதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.