வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு, பாலூத்து, மயிலாடும்பாறை, குமணந்தொழு, மூலக்கடை, முத்தாலம்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில் 400 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் காங்கேயம், திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை மட்டுமல்லாமல் டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடர் கனமழை பெய்தது. அதன் காரணமாக தற்போது கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது.
உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக கடந்த சில நாட்களாக தேங்காய் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேங்காய் வரத்து குறைவின் காரணமாக விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக தேங்காய் ரூ.20 முதல் ரூ.22 வரை விற்பனையாகி வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி இல்லை. இந்த தகவல் அறிந்து தேனி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகளும் சிலரை வியாபாரிகளும், தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய்கள் வாங்குவதற்காக கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை வருசநாடு பகுதிகளில் தங்கி கொள்முதல் செய்து வருகின்றனர்.