டெல்லி : ஒன்றிய அரசின் வரி விதிப்பால் நாடு முழுவதும் தேங்காய் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரூ.400ஐ தாண்டி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஒன்றிய அரசின் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் தேங்காய் எண்ணெய் விலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், தேங்காய் எண்ணெண்யை பயன்படுத்த தொடங்கினர். ஆனால் தற்போது தேங்காய் எண்ணெய் விலை 400 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. தேங்காய் எண்ணெய் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஒன்றிய அரசின் திடீர் கொப்பரை விலை உயர்வு, சீனாவுக்கு தேங்காய் ஏற்றுமதி அதிகரிப்பு போன்ற காரணங்களால் எண்ணெய் ஆலைகளில் கொப்பரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் கொப்பரை குவிண்டாலுக்கு 23,000 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால் சிறு, குறு எண்ணெய் ஆலைகள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன. ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்குவதால் தேங்காய் எண்ணெய் விலை 500 ரூபாயை எட்டக்கூடும் என்று தேங்காய் வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.