சென்னை: ‘ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும்’ என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மொத்தம் 10.98 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 500 கோடிக்கும் கூடுதலான தேங்காய்கள் விளைகின்றன. கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு தேங்காய்கள் வருவதால், அதற்கு போதிய விலை கிடைப்பதில்லை.
இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்குவது தான். அதன் மூலம் தேங்காய்க்கான தேவை அதிகரித்து விலையும் உயரும். ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.