Tuesday, February 27, 2024
Home » ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சாதிக்கும் இல்லத்தரசி!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் சாதிக்கும் இல்லத்தரசி!

by Porselvi

சரளை மண் கொண்ட நிலம். நீர்வளமும் குறைவு. விவசாயம் செய்ய சற்று சிரமப்பட்டுத்தான் ஆக வேண்டும். இத்தகைய சூழலில் தனது 5 ஏக்கர் நிலத்தை பசுமைக்காடாக மாற்றியிருக்கிறார் நிஷா மைதீன். புதுக்கோட்டை நகரப் பகுதியில் வசிக்கும் இவர் தினமும் 10 கிலோமீட்டர் பயணித்து தனது நிலத்தை வாஞ்சையோடு கவனித்து வருகிறார். நிலத்தை பகுதி பகுதியாக பிரித்து எலுமிச்சை, பந்தல் காய்கறிகள், கீரை, தென்னை, மா, பப்பாளி என பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். அதில் விளையும் பொருட்களை மதிப்புக்கூட்டி கூடுதல் வருமானம் பார்த்து வருகிறார். பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள் என பலரும் இவரது வயலுக்கு வந்து செல்கிறார்கள்.

அனைவருக்கும் தனது விவசாய அனுபவத்தை விளக்கமாக கூறுகிறார். இவர் செய்வது முற்றிலும் இயற்கை முறை விவசாயம். அதிலும் பல புதிய யுக்திகளைக் கையாண்டு மகசூலைப் பெருக்குகிறார். இதனால்தான் இவரது வயல் பலருக்கு பாடம் சொல்லும் கல்விக்கூடமாக இருக்கிறது. புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் உள்ள திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி என்கிற கிராமத்தில் அமைந்திருக்கும் நிஷா மைதீனின் வயலுக்கு ஒரு காலைப்பொழுதில் சென்றிருந்தோம். பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம், மண்புழு வளர்ப்பு குறித்து விளக்கம் அளித்துக்கொண்டே நம்மிடமும் பேசினார் நிஷா மைதீன். “ எங்க அப்பா சென்னையில் பிசினஸ் செய்தார். அங்குதான் நான் ஸ்கூல் படிச்சேன். அப்புறமா நாங்க புதுக்கோட்டை வந்துட்டோம். இங்கதான் காலேஜ்லாம் படிச்சேன். இங்கேயே செட்டில் ஆகிட்டோம். எனது கணவர் காதர் மொய்தீன் சவுதி அரேபியாவில் பிசினஸ் செய்றாரு. 2015ம் வருசத்துல இந்த நிலத்தை அவருதான் வாங்குனாரு. வாங்கும்போதே தென்னை, மா, பலான்னு கொஞ்சம் மரங்கள் இருந்தது. அப்பாதான் பார்த்துக்குவாரு. வாரம் ஒருநாள் வந்து வேலை செய்யுற ஆட்களுக்கு சம்பளம் கொடுத்துட்டு போவேன். விவசாயத்துல பெருசா எதுவும் தெரியாது.

அந்த சமயத்துல ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தது. நம்ம கலாச்சாரம், இயற்கை விவசாயம் பத்தி அதிகமா பேசினாங்க. அப்போ எனக்கும் இயற்கை விவசாயம் ஆசை வந்தது. அந்த நேரத்துல தென்னை மரத்துல குரும்பைங்க கொட்டுச்சி. அப்போ சில பேருகிட்ட ஆலோசனை கேட்டேன். வயலில் தேனீ வளர்த்தால் குரும்பை கொட்டாதுன்னு சொன்னாங்க. அதனால நாம தேனீ வளர்க்கலாமேனு தோணிச்சி. அதை முறையா வளர்க்கணும்னு நினைச்சி, கோயம்புத்தூர்ல இருக்கிற தமிழ்நாடு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தோட பூச்சியியல் துறையில தேனீ வளர்ப்பு பயிற்சி எடுத்துக்கிட்டேன். பயிற்சி எடுத்துக்கிட்ட பிறகு 2 பெட்டிகளை வாங்கிட்டு வந்து தேனீ வளர்க்க ஆரம்பிச்சேன். அப்புறமா தோட்டக்கலைத்துறை மூலமா மானியத்துல 8 பெட்டி கொடுத்தாங்க. நான் நல்லா பண்றது பாத்துட்டு மேலும் 15 பெட்டி கொடுத்தாங்க. வயல் முழுக்க தேனீ பெட்டிகளை வச்சி வளர்த்தேன். இப்போ 30 பெட்டி இருக்கு.

தொடர்ந்து இயற்கை விவசாயம் பண்ணணும்னு ஆசை வந்துச்சி. இந்த நிலம் முழுவதும் சரளை மண்தான். 100 அடிக்கு போர் போட்டோம். தண்ணி கம்மியாதான் கிடைச்சிது. இதை வச்சி என்னென்ன பண்ணலாம்னு யோசிச்சேன். தென்னை மரங்களின் அடிப்பகுதியில சோற்றுக்கற்றாழை வச்சிருக்கேன். சோற்றுக்கற்றாழை வச்சா வேர்க்கரையான் தீண்டாது. இதனால தென்னை ஆரோக்கியமா வளரும். சோற்றுக்கற்றாழை நீர்ச்சத்து மிகுந்தது. இதனால தென்னைக்கு நீர்ச்சத்து கிடைக்கும். நிலத்தை நல்லா உழுது எலுமிச்சை, பப்பாளி, கீரை, சப்போட்டா, கொய்யா, நாவல், கொடுக்காப்புளி, தேக்கு, செம் மரம், பந்தல் காய்கறின்னு போட்டிருக்கேன். ஏற்கனவே இருந்தாலும், புதுசா தென்னை, மா, பலாமரங்களை நட்டிருக்கேன். எல்லா பயிர்களுக்கும் சொட்டுநீர்க்குழாய் மூலமா பாசனம் செய்யுறோம். இதனால சிக்கனமாக தண்ணிய பயன்படுத்த முடியுது. நாட்டு மாடு, நாட்டுக்கோழிகளை வாங்கிட்டு வந்து வளர்க்குறோம். அதுகளோட கழிவுகளை பயிர்களுக்கு உரமா பயன்படுத்துறோம். பல பயிர்களை சாகுபடி செய்றதால, ஏதாவது ஒரு பயிர் வருமானம் கொடுக்குற மாதிரி பாத்துக்கிறோம். இதனால தொடர்ச்சியா வருமானம் பார்க்க முடியுது. இங்க உற்பத்தி ஆகுற விளைபொருள் எல்லாத்தையும் மதிப்புக்கூட்டி விற்பனை பண்றேன். இதனால கூடுதல் வருமானம் பார்க்க முடியுது’’ என பேச ஆரம்பித்த நிஷா, ஒவ்வொரு பயிரின் வருமானம் குறித்து விளக்கினார்.

தென்னை மரங்கள்ல கிடைக்கும் இளநீர், தேங்காய்களை நேரடியாக விற்றால் குறைஞ்ச லாபம்தான் கிடைக்கும். நான் பச்சை தேங்காயில் இருந்து விர்ஜின் ஆயில் எடுத்து விற்பனை செய்றேன். விர்ஜின் ஆயிலை 100 கிராம் பாட்டிலில் நிரப்பி ரூ.100 என விற்பனை செய்றேன். மாசத்துக்கு 2 கிலோ ஆயில் விற்பனை ஆகும். இதன்மூலமா ரூ.2 ஆயிரம் வருமானம் கிடைக்குது. எலுமிச்சங்காய்களை பறிச்சி விற்பனை செஞ்சா கிலோ ரூ.10, 20ன்னு தான் விக்க முடியும். நான் எலுமிச்சம்பழங்களை பறிச்சி ஊறுகாயா மாத்தி விக்கிறேன். 200 கிராம் பாட்டில் ரூ.50ன்னு கொடுக்கிறேன். 1 கிலோவுக்கு ரூ.250 கிடைக்கும். மாசத்துக்கு 10 கிலோ ஊறுகாய் விக்க முடியும். இதன்மூலமா ரூ.2500 கிடைக்கும். எலுமிச்சம்பழம் மூலமா பயோ என்சைம், டிஷ் வாஷ் ஆயில் தயாரிக்கிறேன். சோற்றுக்கற்றாழை, குப்பேமேனியில் இருந்து ஜெல் தயாரிச்சி விக்கிறேன். இதன்மூலமாவும் ஒரு வருமானம் கிடைக்கிறது.

நம்ம பண்ணைல எப்பவும் கீரைகள் இருக்கும். முளைக்கீரை, பச்சைத்தண்டு, சிவப்புத்தண்டு, அரைக்கீரை, சிறு கீரை, வெந்தயக்கீரைன்னு பல கீரைகளை சாகுபடி செய்றேன். எல்லா கீரையும் ஒரு கட்டு ரூ.15ன்னு கொடுக்கிறேன். நிலையான பந்தல் அமைச்சி பீர்க்கு, பாகல், சுரை, அவரைன்னு காய்கறிகளை விளைவிக்கிறேன். எல்லா காய்களும் ரூ.40ன்னு கொடுக்கிறேன். மாமரங்கள்ல பல ரகம் இருக்கு. மாம்பழ சீசன்ல காய்களை பறிச்சி, வைக்கோல், வேப்பிலை போட்டு முழுக்க முழுக்க இயற்கை முறையில பழுக்க வச்சி விற்பனை செய்றேன். இமாம்பசந்த் ரூ.100, பங்கனப்பள்ளி, கேசர் ரூ.80, செந்தூரா ரூ.50ன்னு நேரடியா விக்கிறோம். இயற்கை முறையில விளைவிக்கிற பழம், காய்கறிங்குறதால பலர் நேரடியாவே எங்க பண்ணைக்கு வந்து வாங்கிட்டு போறாங்க. தேனீக்கள் மூலமா மாசத்துக்கு 30 கிலோ தேன் கிடைக்குது.

நாட்டு மாடு மூலமா தினமும் 5 லிட்டர் பால் கிடைக்கும். அதை ஒரு லிட்டர் ரூ.45ன்னு கொடுப்போம். இப்போ பால் கறவை இல்லை. இதனால மாடுகளின் கழிவுகளை உரமா மாத்துறோம். பஞ்சகவ்யம், மீன் அமிலம், ஜீவாமிர்தம், நுண்ணூட்டக் கரைசல், ஐந்திலைக்கரைசல், மூலிகை பூச்சிவிரட்டின்னு தயாரிச்சி பயிர்களுக்கு பயன்படுத்துறோம். மண்புழு உரம் தயாரிச்சி அதையும் பயன்படுத்துறோம். இயற்கையான இடுபொருட்களை கொடுக்குறதால எல்லா பயிர்களும் செழிப்பா வளருது. தனி ருசியும் கிடைக்குது. பெருவிடைக்கோழிகளை 15 நாள் வயதுடைய குஞ்சுகளாக வாங்கி வந்து வளர்த்து விக்கிறோம். அதுங்க 7 மாசத்துல வளர்ந்து விற்பனைக்கு தயாராகும். ரூ.50, 60ன்னு வாங்கிட்டு வர்ற குஞ்சுகள் வளர்ந்து ரூ.300, 500ன்னு விற்பனையாகும். சேவல் கூவ ஆரம்பிச்சிட்டா வித்துடுவோம். பெட்டைக்கோழிகள் எடை ஏறிடிச்சின்னா விப்போம். கோழிகளை பண்ணையில மேய்ச்சலுக்கு விட்டுடுவோம். அதுங்க போடுற கழிவுகள் நல்ல உரமா மாறும். சருகுகளை சீய்ச்சி உரமா மாத்திடும். அதுங்க அங்கங்க முட்டை விட்டுடும். அதை நாம தேடி எடுக்குறது சிரமமா இருக்குறதால முட்டை போடுற பருவத்துக்கு முன்னாடியே வித்துடுறோம். மாசத்துக்கு குறைஞ்சது 10 கோழிகளாவது விக்கும். ஒரு கோழி சராசரியா ரூ.400க்கு வித்தாலும் ரூ.4 ஆயிரம் வருமானம் கிடைக்கும். மண்புழு உரத்தை தயாரிச்சி எங்களோட பயன்பாடு போக மீதி உள்ளதை விற்பனை செய்றோம். ஒரு கிலோ மண்புழு உரம் கிலோ ரூ.10ன்னு கொடுக்குறோம்.

15 நாளுக்கு ஒருமுறை 85 கிலோ மண்புழு உரம் கிடைக்கும். மாசம் 170 கிலோ கிடைக்கும். இதன்மூலமா மாசம் ரூ.1700 வருமானம் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு பயிரும், கால்நடைகளும் வருமானம் கொடுக்குறதால தொடர்ந்து உற்சாகமா விவசாயத்தைக் கவனிச்சிக்க முடியுது. பல பள்ளி மாணவர்கள் வந்து இயற்கை விவசாயம் பத்தி ஆர்வமா கேக்குறாங்க. இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சிக்கிறதுக்காக பல ஊர்கள்ல இருந்து வந்துட்டு போறாங்க. விவசாயமே என்னன்னு தெரியாம சிட்டில வாழ்ந்த எனக்கு இப்ப, விவசாயம்தான் ஒரு அடையாளத்தைக் கொடுத்துருக்கு! ‘’ என பெருமை பொங்க பேசுகிறார் நிஷா மைதீன்.
தொடர்புக்கு:
நிஷா மைதீன் – 99948 07068.

அத்தனையும் லாபம்

நிஷாவின் ஒருங்கிணைந்த பண்ணையில் கீரை, மதிப்புக்கூட்டு பொருட்கள், தேன், கோழி வளர்ப்பு, மா, பலா என பலவற்றின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேல் லாபம் கிடைக்கிறது. இதில் இடுபொருட்களுக்காக அவர் பெரிதாக செலவு எதுவும் செய்வதில்லை. பண்ணையில் கிடைக்கும் பொருட்கள், கால்நடைக்கழிவுகள் மூலமே இடுபொருட்கள் தயாரித்துக் கொள்கிறார். பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் போக அத்தனையும் லாபம்தான் என்கிறார் நிஷா.

பலன் தரும் பயோ என்சைம்

ஒரு பாத்திரத்தில் 3 மடங்கு எலுமிச்சம்பழத்தின் தோல், 1 மடங்கு நாட்டுச்சர்க்கரை, 10 மடங்கு தண்ணீர் என கலந்து ஊற வைக்க வேண்டும். 30 நாட்களுக்கு ஒரு முறை பாத்திரத்தைத் திறந்து மூட வேண்டும். 60வது நாள் வரை இதை எதுவும் செய்யக்கூடாது. 90வது நாளில் இந்தக்கலவை பயோ என்சைமாக மாறிவிடும். இதில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். 90வது நாளில் எடுத்து பயன் படுத்தலாம். இந்தக்கலவையை தண்ணீரில் கலந்து அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். நுண்ணுயிர்களைப் பெருக்கி பயிர்கள் செழிப்பாக வளர துணைபுரியும்.

You may also like

Leave a Comment

sixteen − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi