பொள்ளாச்சி: விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகமாக உள்ளது. தென்னையில் உற்பத்தியாகும் மஞ்சி, கொப்பரை உள்ளிட்டவை வெளியிடங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகிறது. இதனால், இங்கு உற்பத்தியாகும் தென்னை சார்ந்த பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை, அம்பராம்பாளையம், ஒடையக்குளம், கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஒரு கிலோ தேங்காய் ரூ.25க்கும் குறைவாக விற்பனையானது. அதன்பிறகும் தேங்காய் உற்பத்தியும், நாளுக்குநாள் அறுவடை அதிகமானது. இதனால் தற்போதும் தேங்காய் விலை குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும், தேங்காய் உற்பத்தி அதிகரிப்பால் களங்களில் உலரவைத்து எடுக்கப்படும் கொப்பரையின் விலையும் குறைந்துள்ளது. இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்து, கடந்த 2 ஆண்டுக்கு முன்புவரை, நாள் ஒன்றுக்கு 300டன் அளவிலான தேங்காய் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டது. தற்போது நாள் ஒன்றுக்கு 600டன் வரை தேங்காய் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் இருந்து சுமார் 75 சதவீத தேங்காய் காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு எண்ணெய் உற்பத்திக்காக அனுப்பி வருகிறோம். மேலும் தேங்காய் விலை வீழ்ச்சியடையும். எனவே, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக, தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்து, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.