லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், 6ம் நிலை வீரரும், 7 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான செர்பியாவின் 38 வயதான நோவக் ஜோகோவிச், 6-1, 6-7 (3), 6-2, 6-2 என்ற செட் கணக்கில், 28 வயதான அலெக்ஸாண்ட்ரே முல்லரை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார். 3வது செட்டின் போது ஜோகோவிச் வயிற்று வலி, சோர்வால் 2 முறை மருத்துவரை அழைத்து ஆலோசித்து மாத்திரை எடுத்துக்கொண்டார். இந்த போட்டி 3 மணி நேரம் 20 நிமிடம் நடந்தது.
அமெரிக்காவின் மார்கோஸ் கிரோன், பிரான்சின் கேல் மோன்ஃபில்ஸ் உள்ளிட்டோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தனர். மகளிர் ஒற்றையர் பிரிவில், 2வது ரேங்க் வீராங்கனையும், நடப்பு பிரெஞ்ச் ஓபன் சாம்பியனுமான அமெரிக்காவின் 21 வயதான கோகோ காப், உக்ரைனின் 42வது ரேங்க் வீராங்கனையான 25 வயது டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா மோதினர். டைப்ரேக்கர் வரை சென்ற முதல் செட்டை 7(7)- 6(3) என டயானா கைப்பற்றினார். 2வது செட்டில் அதிரடியாக ஆடிய டயானா 6-1 என்ற செட் கணக்கில் தன்வசப்படுத்தினார். முடிவில் 7(7)- 6(3) , 6-1 என்ற செட் கணக்கில் டயானா வெற்றிபெற்று 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.
கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-2,6-1 என அர்மீனியாவின் எலினா அவனேஸ்யனையும், சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக், 6-3,6-3 என அமெரிக்காவின் அலிசியாவையும், அமெரிக்காவின் சோபியா கெனின், 7-6,6-2 என சக நாட்டைச் சேர்ந்த டெய்லர் டவுன்சென்ட்டையும் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர். 2 முறை விம்பிள்டன் சாம்பியனான 35 வயதான செக் குடியரசின் பெட்ரா குவிடோவா, 36-,1-6 என அமெரிக்காவின் எம்மா நவரோவிடம் தோல்விஅடைந்து வெளியேறினார். இந்த தோல்வியுடன் அவர் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார்.