சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் நடைபெற இருந்த கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் மீதான கருத்து கேட்பு கூட்டங்களுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையம் உதவியோடு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின்படி, மீனவ கிராமங்கள், மீன்கள் காயவைக்கும் இடம், படகுகள் பழுது பார்க்கும் இடம் உள்ளிட்டவை சரியாக பதியப்படவில்லை என புகார் எழுந்தது.
இதனால் திட்டம் தொடர்பாக கடற்கரையோர மாவட்டங்களில் நடைபெறும் கருத்துகேட்பு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என ஜேசி ரத்தினம், சரவணன் ஆகியோர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்தியகோபால் அமர்வு, கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டனர். முழுமையான திட்டத்தை தயாரித்த பிறகு மீண்டும் அதன் மீது கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தலாம் என சுற்றுச்சூழல் துறைக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.