கவுகாத்தி: கடந்த 3 நாளில் பெயர்த மழையால் 34 பேர் பலியான நிலையில் வடகிழக்கின் 5 மாநிலங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 8 சுற்றுலா பயணிகள் மாயமான நிலையில் மீட்புப்பணி தீவிரமாக நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் 19 மாவட்டங்களில் 764 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, 3.6 லட்சம் மக்கள் துயரத்தில் உள்ளனர்.
இன்று மேலும் இருவர் உயிரிழந்ததால், அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. பிரம்மபுத்ரா ஆறு டிப்ருகர், நீமதிகாட் உள்ளிட்ட இடங்களில் ஆபத்து அளவைத் தாண்டி பாய்கிறது. மேலும் ஐந்து ஆறுகளும் ஆபத்து அளவுக்கு மேல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சிக்கிமின் வடக்கு பகுதியில் 1,200க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
கடந்த மே 29 அன்று தீஸ்தா ஆற்றில் வாகனம் கவிழ்ந்து காணாமல் போன எட்டு சுற்றுலாப் பயணிகளை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேகாலயாவில் 10 மாவட்டங்கள் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் 10,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
அசாம், சிக்கிம், அருணாச்சல பிரதேச முதலமைச்சர்களுடனும், மணிப்பூர் ஆளுநருடனும் அமித் ஷா பேசியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், ‘ஒன்றிய அரசு வடகிழக்கு மக்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கும். அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும்’ என்று பதிவிட்டார். அசாம் அமைச்சர் ஜெயந்த மல்லபருவா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார். விமானப்படை மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் இன்று மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.