தண்டையார்பேட்டை: நடுக்கடலில் படகு பழுதானதால் தத்தளித்த காசிமேடு மீனவர்களை கடலோர காவல் படை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காசிமேடு துறைமுகத்திலிருந்து கடந்த 24ம்தேதி ரமேஷ் என்பவரின் விசைபடகில், வேலு தலைமையில் 9 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்றனர். கடந்த 26ம் தேதி நடுக்கடலில் படகு சென்றபோது திடீரென பழுதானது. இதனால் காற்றின் திசைக்கு ஏற்ப படகு நகர்ந்து இழுத்துச்செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், வயர்லெஸ் கருவி மூலம் அதே பகுதியில் மீன்பிடித்துகொண்டிருந்த மீனவர்களிடம் தொடர்புகொண்டு, படகு பழுதாகிவிட்டதாகவும், தங்களை காப்பாற்றும்படி கூறியுள்ளனர். இதையடுத்து தமிழக மீனவர்கள், பழுதான படகை தேடிப்பார்த்தனர். அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து தங்களிடம் இருந்த சேட்டிலைட் போன் மூலம் ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு, படகு பழுதானது குறித்தும் நடுக்கடலில் தத்தளிப்பது குறித்தும் கூறினர். இதையடுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை இறங்கினர். மீன்வளத்துறை இயக்குனர் பழனிச்சாமி, கடலோர காவல்படை கமாண்டரிடம் பேசி கப்பல் மூலமும், ஹெலிகாப்டர் மூலமும் தேட ஏற்பாடு செய்தார். ஆனாலும் கடலோர காவல்படை வீரர்களால் விசைப்படகை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், கடலில் கப்பல், படகுகள் காணாமல் போகும்போது கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பிடம் இந்த தகவலை கூறினர். இதுபோன்ற படகை பார்த்தால் தங்களுக்கு தகவல் தெரிவிக்கும்படி சர்வதேச எல்லையிலும், இந்திய எல்லையிலும் செல்லும் கப்பல்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, சென்னையில் இருந்து 240 நாட்டிக்கல் மைல் தூரத்தில் பழுதான படகு நிற்பதை காரைக்கால் துறைமுகத்திற்கு வந்துகொண்டிருந்த சரக்கு கப்பலில் இருந்தவர்கள் பார்த்தனர். இதையடுத்து மீனவர்களுக்கு தேவையான உதவி செய்தனர். அதன்பிறகு கப்பலில் கயிறு கட்டி பழுதான விசைப்படகு காற்றுவாக்கில் செல்லாமல் இருக்க கப்பலும் நடுக்கடலில் நின்றது. சரக்கு கப்பல்களுக்கு இந்திய கடலோர காவல்படை ஏற்கனவே தகவல் கொடுத்திருந்தால் அவர்கள் இந்திய கடலோர காவல்படைக்கு சரியான அடையாளத்தை கூறினர். தத்தளித்த மீனவர்களை அடையாளம் கண்டு கடலோர காவல் படை கப்பலுக்கு தகவல் அளித்தனர். கப்பல் விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் இந்திய கப்பலை கண்டதும் கைகளை உயர்த்தி மகிழ்ச்சி பொங்க குரல் எழுப்பினர்.
கடலோர காவல் படையினர் பாதிக்கப்பட்ட படகுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து உணவு அளித்து, படகையும், கப்பலோடு இணைத்து அருகில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு இழுத்து சென்று ஆந்திர மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தங்கள் உயிரை காப்பாற்ற மனிதாபிமான அடிப்படையில் உதவிய காசிமேடு மீனவர்கள், சரக்கு கப்பல் ஊழியர்கள், இந்திய கடலோர காவல் படை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.