பாடாலூர்: பெரம்பலூர் அருகே மேலமாத்தூரில் நேற்று நடந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி ஆட்சி குறித்து இதுவரை எதுவுமே சொல்லவில்லை. அமித் ஷா மட்டுமே திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார். ஆகவே கூட்டணி தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி தான் தெளிவுபடுத்த வேண்டும்.
பாமக தலைவர் ராமதாசை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்துள்ளார். இது கூட்டணி தொடர்பான சந்திப்பா என்றும் தெரியாது. யூகத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை சொல்ல முடியாது. தனிப்பட்ட முறையில் சந்தித்ததாக தான் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார். பாமகவில் தந்தை, மகன் இடையே உள்ள பிரச்னைகளை அவர்களே சீர் செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிலே கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. இவ்வாறு கூறினார்.