ஸ்ரீவில்லிபுத்தூர்: கூட்டணி ஆட்சி பற்றி அமித்ஷா சொன்னதை ஆராய வேண்டாம், எடப்பாடி தெளிவா இருக்கார், அவர் தலைமையில்தான் தேர்தல் பணிகள் நடைபெறுமென அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி தெரிவித்தார். அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், அளித்த பேட்டியில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர், அதிமுக பரம்பரை வாக்காளர்களை நேரில் சென்று சந்திக்க உள்ளேன். யாருக்கு எந்த தொகுதி என முடிவு செய்ய காலம் உள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்’’ என்றார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி ஆட்சி என குறிப்பிட்டது குறித்த கேள்விக்கு, ‘‘வார்த்தைகளின் அர்த்தம், பின்னணி குறித்து இந்த நேரத்தில் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக – பாஜ கூட்டணி முடிவான பின்னர் தேர்தலுக்கான அனைத்து பணிகளும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் நடைபெறும் என்பதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மிக உறுதியாக இருக்கிறார். அதை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதிமுக கூட்டணியில் எந்த கட்சி இணைய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி சரியாக முடிவெடுப்பார். எடப்பாடி மிக தெளிவாக இருக்கிறார். கூட்டணி குறித்து யார் என்ன சொன்னாலும் அது அவர்களுடைய கருத்து’’ என்றார்.