காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கிராமப்புற மக்கள் விவசாயிகள் ஆகியோர் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விவசாய கடன், ஆடு, மாடு வளர்ப்புக்கான கடன், நகை கடன், சிறு வணிக கடன், மாற்றுத்திறனாளிக்கான கடன், சுய உதவி குழுக்களுக்கான கடன் என பல்வேறு கடன்களை வழங்கி கிராமப்புற மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றன. இதில், விவசாயிகளுக்கு தேவையான உரம் மற்றும் நுண்ணுயிர் ஊட்ட பொருட்கள் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மூலம் பெற்று விநியோகிக்கப்படுகின்றன.
இதற்காக வழங்கப்படும் விற்பனை கழிவு 25 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் காசு கடனுக்கு செலுத்தப்படும் வட்டி இறக்கு கூலி உள்ளிட்ட செலவினங்களை ஈடுகட்ட முடியவில்லை. சங்கங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கி வரும்நிலையில் கூடுதலாக பல்நோக்கு சேவை மையம் உட்கட்டமைப்பு எம்எஸ்சி எனப்படும் பன்னோக்கு சேவை மைய திட்டத்தை புகுத்தி விவசாய பொருட்கள் நெற்கதிர் அறுக்கும் இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம், பறக்கும் மருந்து தெளிப்பான் டிரோன், லாரிகள், சிறு சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட ஏதோ ஒரு உபகரணத்தை 2 அல்லது 3 தவணையாக வாங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவதால் இவற்றிற்கு பல லட்சம் முதல் பல கோடி வரை முதலீடு செய்ய வேண்டி உள்ளதாக கூட்டுறவு சங்கங்கள் மாதத்திற்கு 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படும்.
ஆகையால், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 60 கூட்டுறவு சங்கங்கள், 145 பணியாளர்களும் ஒன்று திரண்டு மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் எம்எஸ்சி திட்டத்தை கைவிடக்கோரி கூட்டுறவு மண்டல இணை பதிவாளரிடம் தெரிவித்தும் இந்நாள் வரை பதில் அளிக்காததால் கூட்டுறவு சங்கங்கள் சேர்ந்த பணியாளர்கள் கொள்முதல் நிலைய சாவியினை மண்டல இணை பதிவாளர் ஜெயஸ்ரீ ஒப்படைத்துவிட்டு தொடர் விடுப்பு எடுத்து, அனைத்து பணியாளர்களும் இத்திட்டம் கைவிடும் வரை முழுமையாக ஒழுங்குபடுத்தும் வரை பணியாளர்கள் விடுப்பில் செல்வதாக தெரிவித்தனர்.
மேலும், விவசாய கடன் வழங்கும் பணி, நகைக்கடன், உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிப்படையும் அரசு எங்களது கோரிக்கையை ஏற்று நல்லதொரு முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் கூறினர். இதில், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட பொருளாளர் சேரன் உள்ளிட்ட 145 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.