ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்ட தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது. இங்கு ஸ்ரீவை. புதுக்குடியை சேர்ந்த ஸ்ரீதரன் (52) என்பவர் மேலாளராக இருந்தார்.நேற்று மதியம் ஸ்ரீதரன் வங்கியில் இருந்தார். அவருடன் பணியாற்றும் அறிவுச்செல்வி, பத்ரகாளி ஆகியோர் சாப்பிடச் சென்றுவிட, மதியம் 1 மணியளவில் ஸ்ரீதரன், மனைவி ஜெயாவுக்கு போன் செய்து தனக்கு மயக்கம் வருவதாக தெரிவித்துள்ளார். இதனால் பதறிய ஜெயா, சங்கத்தில் பணிபுரியும் ஒருவருக்கு போன் செய்து பார்க்கச் சொல்லியுள்ளார்.
இதனிடையே வங்கியில் திடீரென புகைமூட்டம் எழுந்துள்ளது. உடனே பொதுமக்கள் சிலரும் சேர்ந்து வங்கி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடல் கருகிய நிலையில் ஸ்ரீதரன் சடலமாக கிடந்தார். தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள், இரு கம்ப்யூட்டர்கள் எரிந்தன. எரியாத ஆவணங்கள் மீட்கப்பட்டன. கூட்டுறவு வங்கியில் போலீசார் நடத்திய சோதனையில் பாதி எரிந்த நிலையில் பெட்ரோல் கேனும், ஒரு தீப்பெட்டியும் கிடைத்துள்ளது. எனவே, இது விபத்தா? தற்கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.