சென்னை: சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி 15 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்” 2023லிருந்து வழங்கப்பட்டு வருகிறது. காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப முதலமைச்சர் கீழ்கண்ட காவல் அதிகாரிகள், காவலர்களுக்கு பதக்கம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.
அதன்படி சிவகங்கை மாவட்டம், காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மதுரை மாவட்டம், மேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மாரிமுத்து, திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் காவல்நிலையம், காவல் ஆய்வாளர் வசந்தகுமார், சென்னை பெருநகர காவல் நுண்ணறிவு பிரிவு, காவல் ஆய்வாளர் ராஜாசிங், சென்னை பெருநகர காவல்துறை தெற்கு மண்டலம், அசோக்நகர் சட்ட ஒழுங்கு காவல்நிலையம் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆவடி காவல் ஆணையரகம், அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, காவல் ஆய்வாளர் ரமேஷ், சேலம் அலகு, போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பாபு சுரேஷ்குமார், சென்னை, மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் அன்பரசி, சென்னை தலைமையகம் அமலாக்கப்பணியகம், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ், கோவை மாநகரம், போத்தனூர் சட்டம் ஒழுங்கு காவல் நிலையம், காவல் உதவி ஆய்வாளர் தனபாலன், நாகப்பட்டினம் மாவட்டம், வலிவலம் காவல் நிலையம், காவல் உதவி ஆய்வாளர் இரணியன், தேனி மாவட்டம், குமுளி காவல்நிலையம், காவல் உதவி ஆய்வாளர் கதிரேசன், சென்னை சென்ட்ரல் ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குருசாமி, திண்டுக்கல், போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுசீந்திரன், மதுரை மாநகரம், கடுமையான குற்றங்கள் விசாரணைப் பிரிவு, காவல் ஆய்வாளர் முருகன் ஆகிய 15 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வரால் இந்த விருதுகள் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.