சென்னை: இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கும், யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லட்சுமிஹர்க்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற சிறார் நூலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் விஷ்ணுபுரம் என்ற ஊரில் பிறந்த விஷ்ணுபுரம் சரவணன், ஊடகங்களில் பணியாற்றியவர். கதைசொல்லி, சிறார் எழுத்தாளர் என பல தளங்களில் இயங்கி வருகிறார். ‘கூத்தொன்று கூடிற்று’ என்ற சிறுகதை தொகுப்புக்காக மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் லட்சுமிஹர்-க்கு சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லட்சுமிஹர் உசிலம்பட்டியில் உள்ள கீழ்செம்பட்டியில் பிறந்தவர். விருது பெற்ற இவர்கள் இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு: சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாதமியின் பால சாகித்ய புரஸ்கார் பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் விஷ்ணுபுரம் சரவணன் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் ‘கூத்தொன்று கூடிற்று” சிறுகதைத் தொகுப்புக்காக யுவ புரஸ்கார் பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹர்க்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களை தொடர்ந்து அளிக்க வேண்டும் என திராவிட மாடல் அரசின் சார்பில் வாழ்த்துகிறேன்.