சேலம்: மேட்டூர் அணை திறக்க நாளை (11ம்தேதி) சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு-ஷோ முறையில் பொதுமக்கள், தொண்டர்களை சந்திக்கிறார். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு, சுமார் ஒரு லட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே சேலம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 11ம் தேதி (நாளை) சேலம் வருகிறார். முன்னதாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து வரும் அவருக்கு, சேலம் மாவட்ட எல்லையான பவானி-மேட்டூர் ரோடு நவப்பட்டி பெரும்பள்ளம் என்ற இடத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
தொடர்ந்து அங்கிருந்து, மேட்டூர் வரை சுமார் 11 கிலோ மீட்டருக்கு ரோடு-ஷோ முறையில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதல்வர், அன்றிரவு மேட்டூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் தங்குகிறார். மறுநாள் 12ம் தேதி காலை 9.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா விவசாயிகளுக்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். பின்னர் மேச்சேரி, ஓமலூர் வழியாக சேலம் வந்து அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். இவ்விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு வீட்டுமனை பட்டா உள்பட 1.01 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், சேலம் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். மதிய உணவிற்கு பிறகு சென்னை திரும்புகிறார். இவ்வாறு அவர் கூறினார்.