Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிட்வா புயலில் பாதிக்கப்பட்ட 85 ஆயிரம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.112 கோடி நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 85 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.112 கோடி நிவாரண தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 2025-26ம் ஆண்டு வடகிழக்கு பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டிட்வா புயலின் காரணமாக 1.39 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 1ம் தேதி ஆய்வு கூட்டம் நடத்தி பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியாக கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக எக்டருக்கு ரூ. 20,000 ஆகவும் வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. டிட்வா புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 இலட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

இயற்கைப்பேரிடர்களால் எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளின் துயர்துடைக்க நேசக்கரம் நீட்டி, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அளித்து வருகிறது. தற்போது ஒப்பளிக்கப்பட்ட நிவரணத்தொகையான ரூ.111.96 கோடி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவள்ளுர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.