சென்னை: வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். வேலூர் மற்றும் ஆம்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோவில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதேபோன்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்ட பணிகளை திறந்து வைத்தும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, இரண்டு நாள் பயணமாக வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.25 மணிக்கு புறப்பட்ட சாய்நகர் சீரடி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்ட சிறப்பு பெட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூருக்கு புறப்பட்டு சென்றார். முதல்வருடன், திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், ஜெகத்ரட்சகன் எம்பி ஆகியோரும் ரயிலில் பயணம் செய்தனர்.
முதல்வரை வழியனுப்பி வைக்க ரிப்பன் மாளிகையில் இருந்தே திமுகவினர் திரண்டு நின்றிருந்தனர். சென்ட்ரல் வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயிலில் ஏறிய அவருக்கு அமைச்சர் சேகர்பாபு, எம்எல்ஏக்கள் மயிலை தா.வேலு, தாயகம் கவி, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து முதல்வரை வழி அனுப்பி வைத்தனர். அப்போது, எஸ்ஆர்எம்யூ பொதுச் செயலாளர் கண்ணையா மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து பேசினார். முதல்வர் புறப்படுவதை முன்னிட்டு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸ் கமிஷனர் அருண், துணை கமிஷனர் சுந்தரவடிவேல் ஆகியோரது தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 10.25 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் மதியம் 12.45 மணிக்கு வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தை சென்றடைந்தது. முதல்வரை கலெக்டர் சுப்புலட்சுமி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதை தொடர்ந்து காட்பாடி ரயில் நிலையத்தில், காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எம்பி கதிர்ஆனந்த், வேலூர் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார், மாநகர செயலாளரும், எம்எல்ஏவுமான ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, வேலூர் புது பேருந்து நிலையம் இருந்து மாவட்ட திமுக அலுவலகம் வரை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். அப்போது, சாலையின் இரு பக்கங்களிலும் கூடி இருந்த ஏராளமான மக்கள், திமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வரிடம் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பலர் கோரிக்கை மனுக்களையும் அளித்தனர்.
தொடர்ந்து, மதியம் 1.20 மணியளவில் வேலூர் பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்திற்கு வந்தடைந்தார். அங்கு காவல்துறையினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து 7 ஆரம்ப சுகாதார நிலையம், 2 துணை சுகாதார நிலையங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதையடுத்து அறுவை சிகிச்சை வார்டு, பிரசவவார்டினை ஆய்வு செய்தார்.
மதியம் 2 மணியளவில் வேலூர் அண்ணா சாலையில் உள்ள விருந்தினர் இல்லத்திற்கு சென்றார். அங்கு நடைபெற்ற விழாவில், வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் அடையாளமாக 12 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மாலை 5 மணியளவில் கெங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் அறிவாலயம் மற்றும் 8 அடி உயரம் கொண்ட கலைஞரின் திருவுருவச்சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆம்பூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு ரோடுஷோ நடத்தினார். அப்போது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, நடந்து சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பத்தூருக்கு சென்ற முதல்வருக்கு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் தங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு ஜோலார்பேட்டை அருகே உள்ள பொன்னேரியில் நடக்கும் அரசு விழாவில் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.