சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 217 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 கோயில்களில் 49 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் பெருந்திட்டப் பணிகளின் கீழ் 86.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்னதானக் கூடம், மலர்மாலை, பூஜை பொருட்கள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் விற்பனை நிலையம், சுதைவேலைபாடுகளுடன் கூடிய நுழைவு வாயில், அடிப்படை வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம், ஒன்பது நிலை ராஜகோபுரத்தினையும், தேர்வீதியினையும் சுதைவேலைபாடுகளுடன் கூடிய இணைப்புபடி கட்டும் பணிகள், திருவள்ளூர் பெரியபாளையம், பவானியம்மன் கோயிலில் 12.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏழு நிலை ராஜகோபுரம், ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கட்டுதல் மற்றும் மூன்றாம் பிரகாரத்தில் மேற்கு பகுதியில் உபசன்னதிகள் அமைக்கும் பணிகள், சென்னை, வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் 1.15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடம் என மொத்தம் 217.98 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 49 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
மேலும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் 3.14 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட திருக்குளம், சென்னை, வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயிலில் 1.15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடம் என மொத்தம் 21.50 கோடி ரூபாய் செலவிலான 33 முடிவுற்ற பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் பழனி, தலைமைப் பொறியாளர் பெரியசாமி, கூடுதல் ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.