சென்னை: துறை வாரியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து 4 அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக துறை வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறார். இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், துறை வாரியான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், நேற்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தொழில் முதலீடுக்கு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை ஆகிய 4 துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சட்டப்பேரவையில் துறை வாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு உள்ளது. முடிவுற்ற பணிகள் எத்தனை, அரசாணை பெறப்பட்டவை எத்தனை, செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் எவ்வளவு என்பது போன்ற விவரங்களை ஆய்வு செய்தார். இத்துடன் பரந்தூர் விமான நிலையத்தின் வருங்கால செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் துறை வாரியான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.