சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சி படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பை உறுதி செய்தல், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியரின் உயர்கல்வி தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு, 2025-26ம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் 26.5.2025 அன்று தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, வரப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையிலும், இந்த கல்வியாண்டில் (2025-26) உயர்கல்வி துறையின் சார்பில் வேலூர் மாவட்டம் – கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் – துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம் ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் 30.5.2025 அன்று அறிவித்தார்.
அதன்படி, 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த 4 கல்லூரிகளும் தலா 5 பாடப்பிரிவுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாமாண்டிற்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லா பணியிடங்கள் வீதம் 4 கல்லூரிகளுக்கு மொத்தம் 48 ஆசிரியர்கள் மற்றும் 56 ஆசிரியரல்லா பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, 4 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடரா செலவினத்திற்காக மொத்தம் ரூ.8 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இப்பகுதிகளில் உள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெறுவார்கள். இதன் மூலம் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, கோவி.செழியன், தலைமை செயலாளர் முருகானந்தம், உயர்கல்வி துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக வேலூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சர் துரைமுருகன், எம்பி கதிர் ஆனந்த், எம்எல்ஏக்கள் நந்தகுமார், அமலு, கார்த்திகேயன், மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலட்சுமி மற்றும் திருவள்ளுவர் பல்கலை துணைவேந்தர் ஆறுமுகம், பதிவாளர் செந்தில்வேல் முருகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், திருச்சி மாவட்டத்தில் இருந்து அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் தியாகராஜன், ஸ்டாலின் குமார், கதிரவன், கலெக்டர் பிரதீப் குமார், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன்,கலெக்டர் தர்ப்பகராஜ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்கள் ஏ.ஜெ.மணிகண்ணன், த.உதயசூரியன், கலெக்டர் பிரசாந்த், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.