சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மனைப்பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். சென்னை, எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ அலுவலகத்தில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு மனைப் பிரிவிற்கான திட்ட அனுமதி இணையவழி சேவை, இணையவழி திட்ட அனுமதி பயிற்சி காணொலி , 12 துறைகளின் ஒருங்கிணைந்த தடையில்லா சான்றிதழ் மற்றும் வீடு மற்றும் மனை வாங்குவோருக்கான விழிப்புணர்வு சித்திர கதைகள் குறித்த கையேடுகள் ஆகியவற்றை வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, சி.எம்.டி.ஏ தலைமைத் திட்ட அமைப்பாளர்கள், முதுநிலை திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். இதன்பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஒற்றை சாளர முறை அடிப்படையில் இணைய வழி திட்ட அனுமதி மென்பொருளை உருவாக்கி, மே மாதம் 2022ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும ஆன்லைன் போர்ட்டல் மூலம் பெறப்பட்ட 1,179 விண்ணப்பங்களில், 820 விண்ணப்பங்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது திட்ட அனுமதி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது முதல், திட்ட அனுமதி வழங்கும் வரை, முற்றிலுமாக இணைய வழியே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், சி.எம்.டி.ஏ-வால் பதிவு செய்யப்பட்ட கட்டிட வல்லுநர்கள், கட்டிடப் பொறியாளர்கள் மற்றும் அபிவிருத்தியாளர்கள் ஆகியோர்களுக்கு இணையதள திட்ட அனுமதி விண்ணப்பம் சமர்ப்பிப்பது, கையாளுவது சம்பந்தமாக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மூலம் பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு, இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட பல்வேறு நேர்முக பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இதில், கூர்ந்தாய்வு மென்பொருள் மூலம் திட்ட அனுமதி வரைபடம் உருவாக்குவதற்கான படிப்படியான செயல்முறைகளை பயிற்சி காணொளி மூலம் விரிவாக விளக்கப்படுகிறது. இது தொடர்பாக, 10 பயிற்சி காணொளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சித்திர கதை’ துவக்கப்பட்டுள்ளது. மனைப் பிரிவிற்கான திட்ட அனுமதி விண்ணப்பங்கள் இன்று முதல் முழுமையாக இணையவழி மூலம் பெறப்பெற்று, பரிசீலிக்கப்பட்டு திட்ட அனுமதி வழங்கப்படும். இணைய வழி மூலம் திட்ட அனுமதி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது முதல் ஒப்புதல் வழங்குதல் வரை முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இணைய வழி மூலம் கட்டிட அனுமதி வழங்குவதையும் செயல்படுத்த சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஆன்லைன் போர்ட்டலை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பெருநகர சென்னை மாநகராட்சி , நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் பேரூராட்சிகள் இயக்ககம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும ஆன்லைன் போர்ட்டல் விண்ணப்பதாரர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இனி வரும் காலங்களில் அனைத்தும் இணையவழி மூலம் செயல்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.