சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் அமெரிக்க பயணத்திற்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்தார். கலைஞரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட்டு விழாவில் கலந்துகொள்ள, அழைப்பு வந்தபோது, பல்வேறு பணிகளால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், முதல்வரை சந்தித்து கமல்ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தையும், முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க பயணத்திற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, மக்கள் நீதி மய்ய பொதுச் செயலாளர் அருணாச்சலம் உடனிருந்தார். இந்த சந்திப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. நவீன தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன்.
மேலும், அவரது வெளிநாட்டு பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன். இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘‘ தலைவர் கலைஞரின் நெஞ்சத்தில் தனக்கென தனி இடம் பெற்றவரும், என் மீது அளவற்ற அன்பு கொண்டவருமான அருமை நண்பர் மக்கள் நீதி மய்யம் தலைவரும், கலைஞானி கமல்ஹாசன் வாழ்த்துக்கு நன்றி’’ என்று பதிவிட்டுள்ளார்.