மதுராந்தகம்: மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், அளிக்கப்பட்ட மனுவின் மீதான உடனடி நடவடிக்கையால், ஈசூர் கிராமத்தில் இருளர்களுக்கு சாலை அமைக்க அதிகாரிகளின் நடவடிக்கையால் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், பூதூர் ஊராட்சியில் உள்ள ஈசூர் கிராமத்தில் சாலை, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி 25 குடிசை வீடுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள். தற்போது, இவர்கள் சொந்த ஊரான ஈசூர் கிராமத்திலேயே தங்கியுள்ளனர். இங்கு வசித்து வரும் இருளர்களுக்கு சாலை வசதி அமைத்துத்தர வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் படாளத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், மனு அளித்திருந்தார்.
இதனையடுத்து, இருளர்களுக்கு சாலை வசதி அமைத்துத்தர அந்த கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கிராம நத்தம் நிலத்தில் இருந்த சிறிய வீடு மற்றும் மாட்டு கொட்டகை ஆகிய ஆக்கிரமிப்புகளை நேற்று வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட 200 மீட்டர் நிலத்தில் மாவட்ட நிர்வாகம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.