கள்ளக்குறிச்சி: தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவர் பெயரில் கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகத்தை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும், எஸ்பியை அவரது அலுவலகத்தின் உள்ளேயே புகுந்து சுட்டுவிடுவதாகவும் கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்துக்கு கடிதம் ஒன்று வந்தது.
இதில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து எஸ்பி ரஜத் சதுர்வேதி உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று இளவரசன் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் தான் இதுபோன்ற கடிதம் ஏதும் அனுப்பவில்லை என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விசாரணை செய்ததில் அதே கிராமத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (47) என்பவரை இளவரசன் என்பவர் சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக பதிவு செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தால் அவரை போலீசில் சிக்க வைக்க இளவரசன் பெயரில் போலியான கடிதத்தை எஸ்பி அலுவலகத்திற்கு கோடீஸ்வரன் அனுப்பியது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோடீஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.