சென்னை: தமிழக முதல்வர் அறிவித்துள்ள முதல்வர் மருந்தகம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் வகையில், ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. பொங்கல் திருநாள் முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட, மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு மூன்று லட்சம் ரூபாய் மானிய உதவியாக அரசால் வழங்கப்படும்.
இது தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கிற ஒரு முக்கியமான திட்டம் மட்டுமல்லாமல், டி பார்ம் மற்றும் பி.பார்ம் படிப்பு முடித்தவர்களுக்கு சொந்த தொழில் தொடங்கிட வாய்ப்பு அளிக்கும் அற்புதமான திட்டமாகும். இந்தத் திட்டத்தின்கீழ், முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் தொடங்கப்படவுள்ளது.
முந்தைய காலங்களில் கூட்டுறவு மருந்தகங்கள் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு முதல் அன்றைக்கு ஆட்சியில் இருந்த அதிமுக ஆட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்ட கூட்டுறவு மருந்தங்களுக்கு அம்மா மருந்தகம் எனப் பெயரிடப்பட்டது. இம்மருந்தகங்கள் கூட்டுறவு மருந்தகங்களை போன்றே சங்கங்களால் நடத்தப்பட்டன; தொழில் முனைவோர் ஈடுபடுத்தப்படவில்லை. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.